கோவை பெரியார் அறிவுலகம் நூல் கொள்முதல் முறைகேடு — வழக்குப்பதிவு செய்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் பரந்தாமன் மனு
கோவை பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடக் கோரி, தி.மு.க. சட்டத்துறை இணைச் செயலாளர் இ. பரந்தாமன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மனு மீதான விசாரணையை நீதிபதி வி. லட்சுமிநாராயணன் நவம்பர் 23-ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
சென்னை: கோவை பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி, தி.மு.க. சட்டத்துறை இணைச் செயலாளர் இ. பரந்தாமன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், அகல் விளக்கு மற்றும் ஃபீனிக்ஸ் பதிப்பகங்களில் இருந்து அதிக எண்ணிக்கையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தப் புத்தக கொள்முதலில் பெரும் அளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து கடந்த 7-ஆம் தேதி தாம் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் அளித்ததாகவும், ஆனால் இதுவரை எந்தவொரு குற்ற வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில், ஏற்கெனவே இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வழக்கை விசாரித்து, பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது என்றும், இந்த வழக்கு நாளை (20.11.2026) மதுரை அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை, அகல் விளக்கு பதிப்பக பதிப்பாளர் மோகனை கைது செய்துள்ளதாகவும், புத்தக கொள்முதல் தொடர்பாக பொது நூலகத்துறை இயக்குநரிடம் விவரங்கள் சேகரிக்கப்பட்டதாகவும், அந்த விவரங்கள் அனைத்தும் மதுரை அமர்வில் தாக்கல் செய்யப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில், ஏராளமான ஆதாரங்களை வைத்துள்ள பரந்தாமனை சாட்சியாக விசாரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, ஏற்கெனவே இதுதொடர்பான வழக்கை மதுரை அமர்வு விசாரித்து வருவதால், ஒருவேளை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையை மதுரை அமர்வு கண்காணிக்கும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், இந்த வழக்கை மதுரை அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கலாம் எனத் தெரிவித்த நீதிபதி, மதுரை அமர்வில் நாளை வழக்கு விசாரணைக்கு வரும்போது, பரந்தாமன் மனுத்தாக்கல் செய்துள்ள விவரத்தை தெரிவிக்க வேண்டும் என காவல்துறை தரப்புக்கு அறிவுறுத்தி, மனு மீதான விசாரணையை நவம்பர் 23-ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.