அரசியல்

தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை கொண்டு வந்த சோப்ளாங்கி ஆட்சி — Sleep Mode-இல் இருக்கும் முதல்வர் விழிக்க வேண்டும் என உதயநிதி கண்டனம்

தமிழ்நாட்டில் இதுவரை இல்லாமல் இருந்த துப்பாக்கி கலாச்சாரத்தை இந்த சோப்ளாங்கி ஆட்சியாளர்கள் கொண்டு வந்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாகக் கண்டித்துள்ளார். குடியாத்தம் அருகே ஞானவேல் என்பவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டது அதிர்ச்சி அளிப்பதாகவும், கொலைகளின் எண்ணிக்கை நிமிடத்துக்கு நிமிடம் ஏறிக்கொண்டே போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டையும், தன் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆட்டத்தையும் பொம்மை முதலமைச்சர் எப்போது கட்டுப்படுத்துவார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எழுதியவர் திராவிடன் செய்திப் பிரிவு · · 1 நிமிட வாசிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை இல்லாமல் இருந்த துப்பாக்கி கலாச்சாரத்தை இந்த சோப்ளாங்கி ஆட்சியாளர்கள் கொண்டு வந்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

குடியாத்தம் அருகே ஞானவேல் என்பவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஒரே நாளில் 9, 11, 13 என நிமிடத்துக்கு நிமிடம் கொலைகளின் எண்ணிக்கை ஏறிக்கொண்டே போவதைப் பார்த்து தமிழ்நாடே பதறினால், அதெல்லாம் பண்டிகை காலக் கொலைகள் என்று வெட்கங்கெட்ட அரசு கூறுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நுங்கம்பாக்கத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை எரியும் பொருள் என்று காவல்துறை கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குற்றச்சம்பவங்களை மறைப்பதற்காக இவர்கள் வைக்கும் பெயர்களைக் கொண்டு தனி அகராதியே போடலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

தேனியில் காவலர் கொல்லப்பட்ட சம்பவத்தில், பணியில் இருந்தபோது கொல்லப்பட்டார் என்று முதலமைச்சரும், பணியில் இல்லாதபோது கொல்லப்பட்டார் என்று அவரது காவல்துறையும் முரண்பட்ட அறிக்கைகளை விடுவதாகவும் உதயநிதி ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மிரட்டல், அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, கமிஷன், பாலியல் தொல்லை என ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் அட்டூழியத்தால் சாமானியர் முதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி வரை பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது எதற்கும் வாயைத் திறக்காமல், பொறுப்பேற்காமல், Sleep Mode-இல் இருக்கும் முதலமைச்சர் உடனே விழித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டையும், தன் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆட்டத்தையும் பொம்மை முதலமைச்சர் எப்போது கட்டுப்படுத்துவார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

முழுப் பதிப்பைக் காண்க