பயந்தாங்கொள்ளியா ராகுல்? சமாஜ்வாதி MP உடைத்த குட்டு..
அமேதியில் போட்டியிட ராகுல் பயந்ததாக சமாஜ்வாதி எம்.பி. சிவ்பால் சிங் படேல் குற்றம்சாட்ட, காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. அகிலேஷ் தலையிட்டு சமாதானம் செய்துள்ளார்.
லக்னோ: 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது பாரம்பரிய தொகுதியான அமேதியில் போட்டியிட மிகவும் பயந்ததால்தான் ரேபரேலிக்கு ஓடினார் என்று சமாஜ்வாதி கட்சி எம்.பி. சிவ்பால் சிங் படேல் வெளிப்படையாகக் குற்றம்சாட்டியுள்ளது இண்டி கூட்டணிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் 2027-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வரும் சூழலில், ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் சிவ்பால் சிங் படேல் இந்த வெடிகுண்டை வீசினார். '2024-ம் ஆண்டு தேர்தலில் ராகுல் தனது பாரம்பரிய தொகுதியான அமேதியை விட்டுக்கொடுக்கத் தயாராக இருந்தார். அங்கிருந்து போட்டியிட அவர் மிகவும் பயந்தார்' என்று அவர் கூறினார்.
மேலும், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்தான் ராகுலை வற்புறுத்தி ரேபரேலியில் போட்டியிடுமாறு சமாதானப்படுத்தினார் என்றும் படேல் தெரிவித்தார். 'ராகுல் போட்டியிடாவிட்டால், அந்தத் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி தனது சொந்த வேட்பாளரை நிறுத்தும் என்று அகிலேஷ் எச்சரித்திருந்தார். அதன் பிறகே ராகுல் போட்டியிட ஒப்புக்கொண்டார்' என்று அவர் கூறியது காங்கிரஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இத்துடன் நிறுத்தாமல், 'சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைக்கவில்லை என்றால், உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற்றிருக்க முடியாது. சமாஜ்வாதி கட்சியின் ஓட்டுகள் விழுந்ததால்தான் காங்கிரஸ் 6 இடங்களில் வென்றது. வரும் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸுக்கு வழங்கப்படும் 50 இடங்களை ஏற்றுக்கொண்டு அவர்கள் மகிழ்ச்சியடைய வேண்டும்' என்று படேல் ஆணவமாகப் பேசியது சர்ச்சையை மேலும் தீவிரப்படுத்தியது.
இந்தக் கடும் விமர்சனத்திற்கு உத்தரப் பிரதேச காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அன்ஷு அவஸ்தி உடனடியாகப் பதிலடி கொடுத்தார். 'இத்தகைய தேவையற்ற கருத்துகளைக் கூறும் தலைவர்களை சமாஜ்வாதி கட்சி உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும். இண்டி கூட்டணியின் காரணமாகத்தான் சிவ்பால் சிங் படேல் எம்.பி.யாகவே ஆகியுள்ளார் என்பதை அவர் மறந்துவிடக் கூடாது. அவர் தனது எல்லையைத் தெரிந்துகொண்டு பேச வேண்டும்' என்று அவர் சாடினார்.
இரு கட்சிகளுக்கும் இடையே பொதுவெளியில் மோதல் முற்றியதைத் தொடர்ந்து, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உடனடியாகத் தலையிட்டார். 'இண்டி கூட்டணியில் உள்ள காங்கிரஸுடனான தொகுதிப் பங்கீடு மற்றும் கருத்து வேறுபாடுகளைப் பொதுவெளியில் பேசக் கூடாது. கட்சித் தலைவர்களுக்கு ஏதேனும் கருத்துகள் இருந்தால், அதை ஊடகங்களிடம் பேசாமல் கட்சியின் உள்விவகாரக் குழுவிடம் மட்டுமே தெரிவிக்க வேண்டும்' என்று தனது கட்சியினருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
2027 உ.பி. சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நிலையில், கூட்டணிக்குள் வெடித்துள்ள இந்த மோதல் இண்டி கூட்டணியின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. பா.ஜ.கவை எதிர்க்க ஒன்றிணைந்த கட்சிகள், தொகுதிப் பங்கீட்டில் மோதிக்கொள்வது பா.ஜ.கவுக்கு சாதகமாக அமையும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். (தகவல்: தினமலர்)