மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது — ஆதவ் அர்ஜூனாவுக்கு பரந்தாமன் பதிலடி
நாகை த.வெ.க. நிர்வாகி தொடர்பான போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் ஆதவ் அர்ஜூனா வாய்திறக்காதது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர் அனுப்பிய வழக்கறிஞர் அறிக்கைக்கு மன்னிப்பு கேட்க முடியாது என தி.மு.க. சட்டத்துறை இணைச் செயலாளர் இ. பரந்தாமன் தமது வழக்கறிஞர் மூலம் பதில் மனு அனுப்பியுள்ளார்.
சென்னை: நாகை த.வெ.க. நிர்வாகி தொடர்பான போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் ஆதவ் அர்ஜூனா வாய்திறக்காதது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர் அனுப்பிய வழக்கறிஞர் அறிக்கைக்கு மன்னிப்பு கேட்க முடியாது என தி.மு.க. சட்டத்துறை இணைச் செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான இ. பரந்தாமன் தமது வழக்கறிஞர் மூலம் பதில் மனு அனுப்பியுள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு கடலோரக் கிராமத்தில், கடல் நடுவில் மாற்றுவதன் மூலம் இலங்கைக்குக் கடத்தப்பட இருந்த ரூ. 100 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சுமார் 137 கிலோ படிக மெத்தபெட்டமைனை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் பறிமுதல் செய்து, தமிழக வெற்றிக் கழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என். பூபாலனை கைது செய்துள்ளது.
ஆனால், சிறு துறைமுகங்கள் துறையின் பொறுப்பு அமைச்சராகவும் தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் தலைவராகவும் இருக்கும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா இதுவரை எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை என்று பரந்தாமன் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து கேள்வி எழுப்பினால் மட்டும் அச்சுறுத்தி முடக்கும் வகையில் வழக்கறிஞர் வாயிலாக அறிக்கை அனுப்பி மிரட்ட நினைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து பொதுவில் இருக்கும் தகவலைத்தான் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியுள்ளதாகக் கூறியுள்ள பரந்தாமன், ஆகவே மன்னிப்போ நஷ்ட ஈடோ வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், மேற்படி வழக்கு தொடர்ந்தால் சந்திக்கத் தயார் என்றும் தமது வழக்கறிஞர் அ. சரவணன் மூலம் ஆதவ் அர்ஜூனாவுக்கு பதில் மனு அனுப்பியுள்ளார்.