தஞ்சை மண்ணின் கழகத் தூண் எம்.இராமச்சந்திரன் மறைவு — மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்
தஞ்சை மண்ணில் கழகத்தின் தூணாக விளங்கிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.இராமச்சந்திரன் மறைந்த செய்தியறிந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மிகுந்த வருத்தம் தெரிவித்துள்ளார். எம்.ஆர். என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட அவர், களப்பணியில் மக்களோடு மக்களாக வாழ்ந்தவர் என்றும், புல்லட் வண்டியில் சென்றும் வயல்வெளிகளில் நின்றும் மக்களின் குறைகளைக் கேட்டு, அவற்றுக்குத் தீர்வுகாணச் சட்டமன்றத்தில் வாதாடியவர் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். திருவோணம், ஒரத்தநாடு தொகுதிகளில் வென்று சட்டமன்ற உறுப்பினராகச் சிறப்பாகச் செயலாற்றிய அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள ஸ்டாலின், அவரைப் பிரிந்து வாட
சென்னை: தஞ்சை மண்ணில் கழகத்தின் தூணாக விளங்கிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.இராமச்சந்திரன் மறைந்த செய்தியறிந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மிகுந்த வருத்தம் தெரிவித்துள்ளார். எம்.ஆர். என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட எம்.இராமச்சந்திரன், களப்பணியில் மக்களோடு மக்களாக வாழ்ந்தவர் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். புல்லட் வண்டியில் சென்றும், வயல்வெளிகளில் நின்றும் மக்களின் குறைகளைக் கேட்டவர் அவர் என்றும், அவற்றுக்குத் தீர்வுகாணச் சட்டமன்றத்தில் வாதாடியவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 1989 மற்றும் 1996-ஆம் ஆண்டு தேர்தல்களில் திருவோணம் தொகுதியிலும், 2016-ஆம் ஆண்டு தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியிலும் வென்று சட்டமன்ற உறுப்பினராக அவர் சிறப்பாகச் செயலாற்றியதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 2016–2021 காலகட்டத்தில் தாம் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, அவரது சட்டமன்றப் பேச்சுகளை ஆழ்ந்து கவனித்து வியந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். கள்ளங்கபடமற்ற பேச்சுக்குச் சொந்தக்காரரான எம்.இராமச்சந்திரன், தேர்ந்த வழக்கறிஞராகவும் இருந்து, எளிய மக்களுக்குத் தேவையான சட்ட உதவிகளையும் செய்து வந்ததாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அவர் தம்மை வந்து சந்தித்தபோது வருந்திய அவருக்கு நம்பிக்கையளித்து வழியனுப்பி வைத்ததாக நினைவுகூர்ந்துள்ள ஸ்டாலின், இனி அந்த அன்பு முகத்தைக் காண முடியாதே என்கிற ஏக்கமும், அவர் பிரிந்த துயரமும் ஒருசேர வாட்டுவதாகத் தெரிவித்துள்ளார். செயல்வீரராக இருந்து தஞ்சை மண்ணில் கழகத்தை வளப்படுத்திய எம்.இராமச்சந்திரனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள ஸ்டாலின், அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், கழக உடன்பிறப்புகள், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தமது ஆறுதலைத் தெரிவித்துள்ளார்.