அரசியல்

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் விரைவாக நீதி கிடைக்க 26 போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள்: முதல்வர் விஜய் உத்தரவு

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக நீதி கிடைக்கவும் 26 போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். ரூ.46.59 கோடி செலவில் அமைக்கப்படும் இந்த நீதிமன்றங்களுடன், போதைப்பொருள் வழக்குகளுக்காக நான்கு புதிய சிறப்பு நீதிமன்றங்களும் அமைக்கப்பட உள்ளன.

எழுதியவர் திராவிடன் செய்திப் பிரிவு · · 1 நிமிட வாசிப்பு

சென்னை உயர் நீதிமன்றம்

தமிழகம் முழுவதும் நிலுவையில் உள்ள போக்சோ வழக்குகளின் நிலை குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், போக்சோ வழக்குகளின் விவரம், தற்போதைய நிலை மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளை மட்டும் விசாரிப்பதற்கென கூடுதலாகத் தேவைப்படும் நீதிமன்றங்கள் ஆகியவை குறித்து தமிழக முதல்வர் விஜய் விரிவாகக் கேட்டறிந்தார். ஆய்வின் அடிப்படையில், இவ்வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்தி, குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அனைத்து மாவட்டங்களிலும் போக்சோ நீதிமன்றங்களை அமைப்பதற்குத் தேவையான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் முதல்வர் உத்தரவிட்டார்.

ஏற்கெனவே, குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை மட்டும் விசாரிப்பதற்காக மாநிலத்தில் 22 சிறப்பு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன; மேலும் நான்கு சிறப்பு நீதிமன்றங்கள் செயல்பாட்டுக்கு வரும் நிலையில் உள்ளன. நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையையும் கருத்தில் கொண்டு, முதல்வரின் அறிவுறுத்தலின்படி 12 புதிய சிறப்பு நீதிமன்றங்களும், 14 கூடுதல் சிறப்பு நீதிமன்றங்களும் என மொத்தம் 26 புதிய சிறப்பு நீதிமன்றங்கள் ரூ.46.59 கோடி செலவில் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்திலுள்ள 47 காவல் மாவட்டங்களுக்கு மொத்தம் 52 சிறப்பு நீதிமன்றங்கள் அமைய உள்ளன. நிலுவையில் உள்ள வழக்குகளில் விரைவான விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, தமிழக அரசின் போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு இயக்கத்தின் ஒரு பகுதியாக, போதைப்பொருள் கடத்தல், பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதுடன், போதைப்பொருள் மற்றும் மனமயக்கப் பொருட்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது தமிழகத்தில் 11 சிறப்பு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், முதல்வரின் உத்தரவின்படி, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் வேலூர் ஆகிய மூன்று இடங்களில் தலா ஒரு சிறப்பு நீதிமன்றமும், சென்னையில் ஒரு கூடுதல் சிறப்பு நீதிமன்றமும் என மொத்தம் நான்கு புதிய சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக விசாரித்து முடிப்பதற்கும், நீதித்துறை நடைமுறைகளை மேலும் விரைவுபடுத்துவதற்கும் வழிவகை செய்யப்படும் என்றும், போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க அரசின் இலக்கை நோக்கித் தொடர்ந்து செயல்படுவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழுப் பதிப்பைக் காண்க