அரசியல்

காவிரியில் 11 டி.எம்.சி. தண்ணீர் கேட்ட மனுக்கள் தள்ளுபடி: அனைத்துக்கட்சிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுங்கள் — ஸ்டாலின்

காவிரியில் 11 டி.எம்.சி. தண்ணீர் கேட்டு தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த இரண்டு மனுக்களையும் உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. குறுவை போய் சம்பாவும் கருகும் நிலையில், விவசாயிகள் தண்ணீரை விலைக்கு வாங்கும் அவலம் நிலவுவதாகக் கூறியுள்ள மு.க. ஸ்டாலின், காவிரி நீருரிமையை நிலைநாட்ட என்ன செய்தீர்கள், பயிர்களைக் காப்பாற்ற என்ன திட்டம், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் எப்போது, முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது என நான்கு கேள்விகளை எழுப்பி, அனைத்துக்கட்சிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுமாறு முதலமைச்சரை வலியுறுத்தியுள்ளார்.

எழுதியவர் திராவிடன் செய்திப் பிரிவு · · 1 நிமிட வாசிப்பு

சென்னை: காவிரியில் 11 டி.எம்.சி. தண்ணீர் கேட்டு தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த இரண்டு மனுக்களையும் உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. நீதிபதிகள் விக்ரம் நாத், அபரேஷ் குமார் சிங் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

குறுவை போச்சு, சம்பாவும் கருகுது என்று தமது பதிவில் குறிப்பிட்டுள்ள மு.க. ஸ்டாலின், வாழ்வா சாவா என்ற நிலையில் தவிக்கும் விவசாயிகளுக்கு, மௌனமாக இருக்கும் முதலமைச்சரின் பதில் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

நாகையில் குறுவை சாகுபடிப் பரப்பு சுமார் 94% சரிந்துள்ளதாகவும், இன்று சம்பா பயிரைக் காப்பாற்ற விவசாயிகள் தண்ணீரையே விலைக்கு வாங்கும் அவலம் நிலவுவதாகவும் ஸ்டாலின் தமது பதிவில் தெரிவித்துள்ளார்.

காவிரி நீருரிமையை நிலைநாட்ட என்ன செய்தீர்கள், பயிர்களைக் காப்பாற்ற என்ன திட்டம், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் எப்போது, விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது என நான்கு கேள்விகளை அவர் முதலமைச்சரிடம் எழுப்பியுள்ளார்.

முதலமைச்சரே, அனைத்துக்கட்சிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுங்கள், தீர்மானங்களை நிறைவேற்றி, பிரதமரைச் சந்தித்து முறையிடுவோம் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

விவசாயிகளின் கண்ணீரைவிட உங்களது தன்முனைப்பு பெரிதல்ல என்றும், பொறுப்புகளைத் தாரைவார்த்துவிட்டு எந்தப் பொறுப்பும் இல்லாமல் சொகுசாக இருக்கலாம் என்று எண்ணாமல், விவசாயிகளின் கண்ணீருக்கு பதில் சொல்லுங்கள் என்றும் அவர் தமது பதிவில் தெரிவித்துள்ளார்.

முழுப் பதிப்பைக் காண்க