தமிழ்நாடு

நூலகங்களுக்கு 10,000 புத்தகங்கள் — இதுவரை 7 லட்சத்து 10 ஆயிரம் புத்தகங்களை வழங்கியுள்ளார் மு.க.ஸ்டாலின்

தம்மை நேரில் சந்தித்தவர்கள் அளித்த புத்தகங்களை, தங்கள் பகுதி நூலகங்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (05-11-2026) மூன்று நூலகங்களுக்கு மொத்தம் 10,000 புத்தகங்களை வழங்கினார். இதுவரை பல்வேறு கல்லூரி மற்றும் மாவட்ட நூலகங்களுக்கு 7 லட்சத்து 10 ஆயிரம் புத்தகங்களை அவர் வழங்கியுள்ளார்.

எழுதியவர் திராவிடன் செய்திப் பிரிவு · · 1 நிமிட வாசிப்பு

சென்னை: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தவர்கள், தாங்கள் அவருக்கு அளித்த புத்தகங்களை, தங்கள் கல்லூரி மற்றும் பகுதிகளில் உள்ள நூலகங்களுக்கு வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அவர், இன்று (05-11-2026) காலை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், அந்தந்த நூலக நிர்வாகிகளிடம் புத்தகங்களை வழங்கினார். திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தூய சவேரியார் (தன்னாட்சி) கல்லூரி நூலகத்திற்கு 5,000 புத்தகங்களும், தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் ரஹ்மானியா கல்வி கூடம் வாட் பயிற்சி மையத்திற்கு 3,000 புத்தகங்களும், திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், அரசு கலை கல்லூரி நூலகத்திற்கு 2,000 புத்தகங்களும் என மொத்தம் 10,000 புத்தகங்கள் வழங்கப்பட்டன. தமக்கு வரப்பெற்ற புத்தகங்களில் இதுவரை 7,10,000 (7 லட்சத்து 10 ஆயிரம்) புத்தகங்களைப் பல்வேறு கல்லூரி மற்றும் நூலகங்களுக்கு ஸ்டாலின் வழங்கியுள்ளார்.

முழுப் பதிப்பைக் காண்க