அரசியல்

சட்டம்-ஒழுங்கு தோல்வியை மறைக்க புள்ளிவிவரத்தின் பின் ஒளிந்துகொள்வதா? — டி.ஜி.பி. பேட்டியை கண்டித்த உதயநிதி

கடந்த 5 ஆண்டுகளை ஒப்பிடுகையில், இந்த 6 மாத ஆட்சியில் கொலைகள் குறைந்துவிட்டதாக காவல்துறை டி.ஜி.பி. மகேஷ் குமார் அகர்வால் பெருமிதம் தெரிவித்திருப்பது உண்மை நிலையை மறைப்பதாக உள்ளது என்று உதயநிதி ஸ்டாலின் கண்டித்துள்ளார். தீபாவளி அன்று மட்டும் 17 உயிர்கள் பறிபோன நிலையில், கொலைகள் குறைந்துவிட்டதாகக் கூறுவது ஆறுதல் அல்ல, நிர்வாகத்தின் அவலம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எழுதியவர் திராவிடன் செய்திப் பிரிவு · · 2 நிமிட வாசிப்பு

சென்னை: தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து காவல்துறை டி.ஜி.பி. மகேஷ் குமார் அகர்வால் அளித்துள்ள பேட்டி, உண்மை நிலையை மறைப்பதாக அமைந்துள்ளது என்று உதயநிதி ஸ்டாலின் கண்டித்துள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளை ஒப்பிடுகையில், இந்த 6 மாத ஆட்சியில் கொலைகள் குறைவுதான் என்று டி.ஜி.பி. பெருமிதம் தெரிவித்திருப்பதாகவும், ஆளுங்கட்சிப் பிரமுகரைப் போல அவர் பேசியிருப்பதாகவும் உதயநிதி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளின் சராசரி கொலை எண்ணிக்கையை, நடப்பாண்டின் 10 மாதச் சராசரியோடு ஒப்பிடுவது எந்த வகையில் நியாயம் என்றும், கடந்த 6 மாதங்களில் குற்றச் செயல்களே நடக்காதது போலவும், சட்டம்-ஒழுங்கு சீரும் சிறப்புமாக இருப்பது போலவும் அந்தப் பேட்டி அமைந்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தீபாவளி அன்று மட்டும் 17 உயிர்கள் பறிபோன நிலையில், டி.ஜி.பி.யே கொலைகள் குறைந்துவிட்டதாகக் கூறுவது ஆறுதல் அல்ல, அது நிர்வாகத்தின் அவலம் என்று உதயநிதி தெரிவித்துள்ளார். உண்மையிலேயே கொலைகள் குறைந்துவிட்டன என்றால், தீபாவளிப் படுகொலைகளுக்குப் பிறகு பொம்மை முதலமைச்சர் ஏன் அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும், அதில் ஏன் டி.ஜி.பி. பங்கேற்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

போதைப்பொருள் வழக்குகள் 74 சதவிகிதம் அதிகரித்துள்ளன என்று டி.ஜி.பி. கூறியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ள உதயநிதி, தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் போதைப்பொருள் தங்கு தடையின்றிக் கிடைக்கிறது என்பதுதானே அதற்கு அர்த்தம் என்றும், பள்ளிகள் வரை போதைப்பொருளும் கஞ்சாவும் தாராளமாகப் புழங்குவதால்தானே இத்தனை வழக்குகள் பதிவாகின்றன என்றும் கேட்டுள்ளார். நோய் முற்றிவிட்டது என்பதை ஒப்புக்கொள்வதற்குப் பதிலாக, அதிக மாத்திரைகள் கொடுப்பதாகப் பெருமை பேசுவது போல டி.ஜி.பி.யின் விளக்கம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

137 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த த.வெ.க. நிர்வாகி பூபாலனைத் தமிழகக் காவல்துறை ஏன் கைது செய்யவில்லை என்றும், ஒன்றிய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தமிழ்நாட்டிற்கு வந்துதானே அவரைக் கைது செய்தார்கள் என்றும், அப்படியென்றால் பூபாலனைப் பாதுகாத்தது யார் என்றும் உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

அரியலூரில் ரோந்துப் பணியில் இருந்த ஊர்க்காவல் படை வீரரும், தேனியில் சிறப்பு உதவி ஆய்வாளரும் போதை ஆசாமிகளால் அடித்துக் கொலை செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், பிறகு எப்படிப் போதைப் பழக்கத்தைக் கட்டுப்படுத்தினீர்கள் என்று கேட்டுள்ளார்.

பெண்களின் பாதுகாப்பிற்காக ‘சிங்கப்பெண் படை’ அமைத்ததாக மார்தட்டிக்கொள்ளும் ஆட்சியில், ஆளுங்கட்சி நிர்வாகிகளே பெண்களுக்கு எதிரான குற்றங்களில் வரிசையாகச் சிக்கி வருவதாகவும், த.வெ.க.வினர் செய்யும் தவறுகள் சிங்கப்பெண் படையின் கண்களுக்குத் தெரியாதவாறு ‘ஷீல்டு’ போடப்பட்டிருக்கிறதா என்றும் உதயநிதி கேட்டுள்ளார்.

கோவை காரமடையில் த.வெ.க. பெண் நிர்வாகிக்கு அக்கட்சியின் ஒன்றியச் செயலாளரே பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளர் மீது பாலியல் புகார் எழுந்ததாகவும், சென்னை கோயம்பேடு நட்சத்திர விடுதியில் பணிபுரியும் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த த.வெ.க. மாவட்ட நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டதாகவும், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு த.வெ.க. எம்.எல்.ஏ. ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக சர்ச்சை எழுந்ததாகவும் அவர் தமது அறிக்கையில் பட்டியலிட்டுள்ளார். இவையெல்லாம் டி.ஜி.பி.யின் புள்ளிவிவரப் பட்டியலில் இடம்பெறாதது ஏன் என்றும், திருவைகுண்டம் முதல் கள்ளக்குறிச்சி வரை ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது குவியும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எத்தனை வழக்குகள் பதியப்பட்டுள்ளன, எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொலைகள் குறைந்துவிட்டதாக முடிவறைக்கும் காவல்துறையால், தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் கைதிகளைக்கூடப் பத்திரமாகப் பாதுகாக்க முடியவில்லை என்றும், காவலர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டுக் கைதிகள் தப்பியோடும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருவதாகவும் உதயநிதி தெரிவித்துள்ளார். கடந்த 6 மாதங்களில் தப்பியோடிய கைதிகள் குறித்த புள்ளிவிவரத்தை டி.ஜி.பி. வெளியிடுவாரா என்றும் அவர் கேட்டுள்ளார்.

சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக டி.ஜி.பி. தனக்குத்தானே ‘சுயச்சான்றிதழ்’ கொடுத்துக்கொள்வது நகைப்புக்குரியது என்றும், குற்றங்களின் எண்ணிக்கையைப் பிரித்துக் காட்டிப் பெருமிதம் கொள்வதால் களத்தில் மக்களின் அச்சம் குறைந்துவிடாது என்றும், ஆளுங்கட்சியினரின் அத்துமீறல்களையும், போதைப்பொருள் நடமாட்டத்தையும், நிர்வாகத் தோல்விகளையும் வெறும் சதவிகிதக் கணக்குகளால் மறைக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புள்ளிவிவர வித்தைகளை விட்டுவிட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட அனைத்துத் தரப்பு மக்களின் உண்மையான பாதுகாப்பைக் களத்தில் உறுதி செய்ய காவல்துறை முன்வர வேண்டும் என்று உதயநிதி தமது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

முழுப் பதிப்பைக் காண்க